Monday, August 30, 2010

அழிந்து வரும் நெல்மணிகள்:ஆபத்தும் பேராபத்தும்-கடற்கரய்








எவ்வளவு விஷயங்களுக்குதான் நாம் போராடுவது சொல்லுங்கள்? விதைகளில் வீரியம் குற்றிக் கொண்டே வருகிறது.பச்சைப் பிள்ளைக்கு காம்பை கொடுக்கும் தாய்ப்பாலில் நஞ்சுக் கூடிக்கொண்டுள்ளது.பசுமைப்புரட்சி என்ற aaமடத்தனமான வேளாண்மையால் விளைநிலம் பழாகிவிட்டது.பன்னாட்டு கம்பெனிகளுக்காக பூர்வக்குடிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக அரசு கையகப்படுத்தி,செழிப்பான இயற்கை வளங்களை அழிவுக்குள்ளாக்கி வருக்கிறது.புவியில் சீதோஷ்ண சீர்கேட்டால் அதன் பன்மயச் சுழச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.நாம் முன்பே சந்திக்க நேர்ந்த கடல் சுனாமியைப் போல் சூரிய சுனாமியின் வருகையால் பூகோள அமைப்பின் வாழ்நிலை நெருக்கடிக்கு உள்ளாகப்போகிறது. இப்படி தினம்தோறும் ஏராளமான பத்திரிகைச் செய்திகள் வெளி வருகின்றன. இவை வெறும் செய்திகள் மட்டுமே அல்ல; பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தாங்கள் பல காலமாக மேற்கொண்டு ஆய்வுவிற்கு பின் எதிர்காலத்தில் நிகழப்போகும் பிரச்னையின் முடிவை முன்கூட்டியோ அல்லது ஏற்கெனவே உள்ளாகி தவிக்கும் பாதிப்புக்கான காரணியின் விடை குறித்தோ வெளியாகி வருகின்றன செய்திகள். ஆக, முக்கிய கவனம் எடுத்து மக்கள் கவனிக்க வேண்டிய செய்திகள் இவை.இவ்வளவு ஆபத்தானச் செய்திகளை மக்கள் கவனிக்கிறார்களா? அது குறித்து ஏதாவது யோசிக்கிறார்களா? ஒன்றுமே புரியவில்லை. இது நம் பிரச்னையல்ல என்ற தொனியிலேயே அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

மேலை நாடு ஒன்றில், ஒரு குறிப்பிட்ட குளத்தில் உரியிர் வாழும் தவளைகள் இரட்டை தலைகளோடும் இரட்டை உடலுறுப்புகளோடும் பிறப்பதாக ஒரு தகவலை உயிரியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்தார்கள். இதை முதலில் மரபணு மாற்ற பிரச்னை என்றும், ஜீன் கோளாறு என்றும் நம்பிய விஞ்ஞானிகள்,பின்னால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இதற்கு ஜீனோ,மரபணுவோ காரணமல்ல என்ற முடிவுக்குத் திரும்பினார்கள்.இவை இரண்டும் காரணமில்லை என்றால் அப்போது பிரச்னையின் ஊற்றுக்கண்தான் என்ன? தொடர்ந்து தேடினார்கள்.ஊரில் ஒரு குட்டை விடாமல் சோதனை மாதிரிகளை சேகரித்தார்கள்.விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக சோதனைச்சாலையே கதி என்று கிடந்தார்கள். விளைவு? அதற்கான சரியான காரணியை கண்டுபிடித்தார்.உலகத்தையே அதிர வைக்கும் தகவலை வெளியிட்டார்கள். அதன்படி இதற்கு காரணம் விளைநிலங்கள்தான் என்றது அவர்களின் ஆராய்ச்சி முடிவு. ஒருதவளை இரட்டைத்தலையோடு பிறப்பதற்கும் விளைநிலத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? ஆம், இந்தப் பூமியில் எல்லாவற்றிற்கும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இருக்கிறது. ஆகையால்தான் ஒரு பட்டாம்பூச்சியின் மரணம் பற்றி கவலைக் கொள்கிறது கேயாஸ் தியரி.

அந்த உயிரியலாளர்கள் கண்டறிந்த உண்மை இதுதான் : விவசாய உற்பத்திக்காக விளைநிலங்களில் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொள்ளி மருந்துகள் மண்ணின் மேல் படிந்துபடிந்து நஞ்சாகத் தங்கி, பின் ஏரிகளிலும் குட்டைகளிலும் போய் கலந்து இன்றைக்கு தவளைகளின் தலையெழுத்தையே மாற்றி இருக்கிறது. தவளைகளின் தலையெழுத்து தானே என்று நீங்கள் கண்டுக்கொள்ளாமல் அசட்டையாக இருந்தால் நாளை பிறக்கப்போகும் மனிதனும் இவ்வாறான உடல் உபாதைகளால் சிரமப்படலாம் என்றார்கள் அதே விஞ்ஞானிகள். இதை கேட்டப் பின்பும் உலகல் விழித்துக்கொண்டுவிட்டதா?அதுதான் இல்லை. தூர தேசத்தில் எங்கோ மாதிரிகளை சேகரித்து அவர்கள் வெளியிடும் தகவல்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? நிறையவே இருக்கிறது. அவ்விஞ்ஞானிகள் எந்தப் பூச்சிக்கொள்ளியால் பூமிக்கு ஆபத்து ஆபத்து என்று அலறுகிறார்களோ அந்த உயிக்கொல்லி மருந்தைத்தான் கொஞ்சமும் விழிப்புணர்வற்று நாம் நம் வயல்களில் அதிக மகசூலுக்காக அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறோம்.இன்று அவர்களுக்கானது நாளை நமக்கானது.நாளை நமக்கானது இன்னொருநாள் மற்றொருவருக்கானது. கீதையின் சுழற்சி இங்கேயும் செயல்படும்.

சரி,நாளை வரப்போவதுதானே என்று ஆசுவாசப்படுபவர்கள் இத்தகவலை கவனிக்கவும்.இந்தியா எதிர்நோக்கி இருக்கும் இன்னொரு பேராபத்தை சற்று உள்வாங்கி கொள்ளவும். ஆப்ரிக்க துணைக் கண்டத்தில் உள்ளவர்களைவிட, இந்தியாவில் பட்டினியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக நவதானிய அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் 57 லட்சம் குழந்தைகள் போஷாக்கின்மை காரணமாக, சராசரி எடையை விட குறைவான எடையுடன் பிறப்பதாகவும், நம் நாட்டில் மொத்த உணவு உற்பத்தியைப் பற்றி அதிகமாகப் பேசப்படும் வேளையில், கடந்த 1991-ம் ஆண்டு தாராளமாயப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின்னால், இந்தியாவில் தனி நபருக்குக் கிடைத்து வந்த உணவு,அதற்கு முன் இருந்ததை விட 2001-ம் ஆண்டில் 150 கிலோவாகக் குறைந்துவிட்டது என்றும் இப்படி உணவு உற்பத்தி அளவும் பெருமளவு குறைந்துவிட்டதற்கு, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை வேறு பயன்பாடுகளுக்குக் கொடுத்துவிட்டு வெளியேறி வருவது ஒரு காரணம் என்றும் அவர் ஆராய்ந்திருக்கிறார். மேலும்,இந்த ஆய்வானது ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட ஆய்வின் அடிப்படையிலேயே தங்களின் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக வந்தனா சிவா தெரிவிக்கிறார். தொடர்ந்து அவரே,இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள புண்டேல்கண்ட் பிராந்தியத்தில் தங்கள் அமைப்பு நடத்திய ஆய்வில், 90 % குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

இதிலிருந்து நாம் ஒன்றை மட்டும் புரிந்துக்கொள்ள முடிகிறது. இந்தப் பூவுலகு ஏதோ ஒரு நெருக்கடிக்குள் சிக்கித் தினறிக் கொண்டிருக்கிறது. அந்த நெருக்கடி தானே உண்டானவையல்ல; பொருளாதாரத்தில் வலுத்த நாடுகள் ஏழை உயிரோடு எதன் பொருட்டோ விளையாடி வருகின்றன.அவர்களுக்கு இது விளையாட்டு.நமக்கு உயிர்பிரச்னை. இப்படி ஆசிய நாடுகளில் வாழும் மக்களின் உயிர் பிரச்னையின் மையமாக திகழும் நெல் உற்பத்தியை பற்றியும் அதன் அழித்தொழிப்பு பற்றியும் விவாதிக்கும் கோ.நம்மாழ்வாரின் சமீபத்திய நூலே வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்என்கின்ற நூல். இந்நூலின் அடிநாதம் நெல்லை பாதுகாப்பது. மண்ணிற்குள் புதையுண்டு போன தானியங்களை அடையாளப்படுத்துவது,ஆவணப்படுத்துவது.பசுமைப் புரட்சியால் மறுபடி திரும்ப முடியாது தவிக்கும் வாழ்க்கைக்கு நடுவில் மிகச் சுலபமாக உங்களை திரும்பிப்போக வழிகாட்டுவது.இதைதான் மிக எளிய முறையில் இந்நூலில் தொடர்ந்து பேசுகிறார் நம்மாழ்வார்.

தஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் சிறு உழவாண்மை முடும்பத்தில் பிறந்த நம்மாழ்வார் அண்ணாமலை நகர் உழவர் கல்லூரியில் 1959-63 ஆம் ஆண்டு வேளாண்மை கல்வியில் படித்து பட்டம் பெற்றவர். இவர் காலத்தில்தான் உழவாண்மை மறைந்து பசுமைப்புரட்சி தொடங்கியது. பள்ளிப்படிப்பு முதலே காலையிலும் மாலையிலும் உழவாண் வேலையில் ஈடுப்பட்டு இவர் இயற்கை உழவாண்மை செய்ததால் நவீன வேளாண்மையின் அபாயம் அறிந்து களப்பணிக்குள் கால்பதிக்க வந்துவிட்டார். அதன் பின் இயற்கை உழவாண்மைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட நம்மாழ்வார் இன்று தமிழகத்தின் புதிய அடையாளமாக கருதப்படுகிறார். விளைச்சலை கூட்டுவது குறித்து பேசிக் கொண்டிருப்பதோடு நிற்காமல் இவர் தமிழ்நாட்டில் சாதித்திருப்பது ஏராளம். அவருக்குப் பின்னால் ஒரு பெரிய மக்கட் திரளே ஒரு வேளாண் புரட்சியை மேற்கொண்டிருக்கிறது. நம் மண்ணுக்கே உரிய மஞ்சலின் காப்பீட்டு உரிமையை மேலைநாட்டினர் கையகப்படுத்த இருந்த வேளையில் சர்வதேச நீதிமன்றம் வரை சென்று வாதாடி வென்ற பெருமைக்குரிய மனிதர் இவர்.

“நாற்பது நாடுகளில் இன்று உணவுக்கான கலவரம் நடக்கிறது என ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அறிவித்திருக்கிறார்.உற்பத்தியாகின்ற உணவு தானியத்தில் 48 விழுக்காடு கால்நடைத் தீவனமாக மற்றப்படுகிறது.கோதுமை,சோயாமொச்சை,மக்காச்சோளம்,கரும்பு போன்றவை டீசலாக மாற்றப்படுகின்றன.உலகில் வாழும் மக்களில் பாதிப் பேருக்கு உணவுக்கு உத்திரவாதம் இல்லை.85கோடி மக்கள் தினமும் பசியோடு படுக்கைக்குச் செல்கிறார்கள்.என்கிற அதிரடித் தகவலோடு தொடங்கும் இந்தப் புத்தகம் வழக்கமான சுற்றுச்சூழல் பாணியான எழுத்து நடையில் எழுதப்படாமல் மிகச் சரளமாக ஒரு குழந்தைக்கு எடுத்து சொல்வதைப் போல் எழுதப்பட்டு இருகிறது. வெறும் புள்ளி விவரங்களோடு மட்டுமே நின்றுவிடாமல் வரலாற்றினை பின்னோக்கிப் பார்த்து உணவு போதாமைக்கான காரணிகளை நிறை செய்ய முயலுகிறது.

இன்று உலகில் உயிர் வாழும் மக்களில் பாதிக்கும் அதிகமானோர் அரிசியை உணவாக நம்பியே உயிர் வாழ்கிறார்கள்.இதற்கான அரிசி உற்பத்தி பெரும்பகுதி ஆசிய நாட்டில் நடக்கிறது. அதிலும் சீனா,இந்தியாவிலும் மட்டுமே விளைகிறது.இதில் குறிப்பாக இந்தியாவில்,மேற்குவங்கம்,ஆந்திரம்,தமிழ்நாடு,கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களின் முக்கிய உணவாக அரிசியே உள்ளது. நம்முடைய நாட்டில் 15 ஆயிரம் ஆண்டுகளாக அரிசி நம் மக்களின் வாழ்க்கையை தீர்மானித்து வந்துள்ளதாக சரித்திரம் சொல்கிறது. அப்படி என்றால் நெல் மட்டுமே இருந்தால் மக்கள் பசியற்று வாழ்ந்து விடுவார்களா? இக்கேள்விக்கு விடை சொல்கிறது நமது பண்டைய இலக்கியம்.

“நெல்லும் உயிரன்றே.நீரும் உயிரன்றே.மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

-இதன் பொருள் என்ன? வெறும் நெல்லும் நீரால் மக்களை வாழவைக்க முடியாது. மன்னனின் செங்கோலுக்கே அந்தத்தகுதியுண்டு என்கிறது தமிழர் வகுத்த வாழ்நெறி.

“உழுது விதைத்து அறுபார்க்கு உணவில்லை.பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வம் எல்லாம் உண்டுஎன்கிறான் பாரதி. இவ்வளவு ஏன் சமகாக வரலாற்றில் நாம் தேசத்தை கிஸான்கி பாரத் என்றல்லவா பெயரிட்டு அழைத்தோம். இந்நூலின் மூலம் அந்தப் பாடம் எல்லாம் மலையேறியாயிற்று என்கிறார் நம்மாழ்வார். இன்று நம் தேசம் 1லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் கொடுத்து உரத்தை இறக்குமதி செய்கிறது.இதன் வெளிப்பாடு என்ன?வேளாண்மையை தொழில் தூக்கில் கொண்டிருக்கிறது என்பதுதான் என்கிறார் இவர். இதற்கெல்லாம் யார் காரணம். லார்டு மெக்காலே சொல்வதை கேளுங்கள்.இவர்தான் 1835ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் இந்தியருக்கான ஆங்கில மேற்கல்வியை தொடங்கியவர்.இது ஊரறிந்த விசயம்.சரி,அவரது பேச்சிக்கு வருவோம்:

“நாடு முழுவதும் உள்ளவர்களுக்குக் கல்வி அளிக்க எங்களிடம் வசதி வாய்ப்பு இல்லை.எங்களுடைய இப்போதைய முயற்சி இதுதான்: எங்களுக்கும் எங்களால்(கோடிக்கணக்கில்) ஆளப்படுவோர்க்கும் இடையில் விவரங்களைப் பரிமாறக்கூடிய ஒரு கும்பலை முதலில் உருவாக்குவோம்.அவர்கள் இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள்.ஆனால் கருத்தாலும்,புத்தியாலும்,சுவையாலும் ஆங்கிலேயராக இருப்பார்கள் இவ்வாறு மெக்காலேவின் குரலாக செயல்பட்டவர்கள்தான் வேளாண்மையமைச்சராகவும் பசுமைப் புரட்சியாளராகவும் சுதந்திரத்திற்கு பின்னால் நம் தேசத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது தற்கால வரலாறு. காந்தியின் பக்தர் போல் நடித்த முன்னாள் உணவு-உழவு அமைச்சர் சி.சுப்பிரமணியமே இதற்கு கையாளாகிப்போனதை நாம் எப்படி உள்வாங்க? என்று குரலை உயர்த்துகிறார் நம்மாழ்வார். தொடர்ந்து இவர் அங்கலாய்ப்பதை படியுங்கள்:

இந்தியா சுதந்திரம் அடைகிறபோது முப்பதாயிரம் நெல் ரகங்கள் இருந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.கேரளாவில் 1880ம் ஆண்டு வாக்கில் பயணம் செய்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் 50 வகையான நெல் ரகங்களை தானே பார்த்ததாக எழுதுகிறார்.அவர் குறிப்பிடும் இன்றும் கேரளாவின் மேலைக் கரையோரம் கடல்நீர் புகும் பகுதிகளில்’பொக்காலி’நெல்பயிர் செய்யப்பட்டுவருகிறது. ஒரிசாவில் மட்டும் நவதான்யா குழு 300க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை அடையாளம் கண்டு வைத்திருக்கிறது. தமிழகத்தில் புதுமாப்பிள்ளை அரிசி சோற்றில் ஊறிய நீராகாரத்தை பருகியவர்கள் சர்வ சாதாரணமாக இளவட்டக் கல்லைப் புரட்டிப் போட்டிருக்கிறார்கள்.அந்த நெல் மாப்பிள்ளை சம்பா என பெயரானது.தலை ஞாயிறு வட்டாரத்தில் தண்ணீர் மிகுந்த போதும் நீர் மட்டத்திற்கு மேல் தலை தூக்கிக் கதிர் தள்ளும் நெல்லுக்கு பெயர்,காட்டிடை ஓணான்.நாகப்பட்டினம் கடல் ஓரம் கடல் நீர் புகுந்தாலும் விளையும் திறன் பெற்ற நெல்லுக்கு குழியடுச்சான். இப்படி ஆறு மாதத்தில் விளையும் வாடன் சம்பா,கட்டைச் சம்பா ஐந்து மாதத்தில் விளையும் கிச்சடிச் சம்பா,கார்த்திகைச் சம்பா மூன்று மாதத்தில் விளையும் குள்ளக்கார்,கருங்குறுவை,செங்குறுவை,செங்கல்பட்டுச் சிறுமணி,ஈரக்கசிவில் கூட விளைச்சலுக்கு வரும் உவர் மொண்டானும்,ஓசுவக்குத் தாளையும் வெள்ளத்தின் மேல் கதிர் நீட்டும் மடுமுழுங்கியும் அறுபது நாளில் விளையும் அறுபதாங்குறுவையும் எழுபது நாளில் விளையும் பூங்கார் போன்ற வகை நெல்களும் முன்னால் நம்மிடம் இருந்தன. இந்த சகலத் தகவல்களும் நம்மாழ்வாரின் தேடல் பட்டியலில் இருந்து நமக்கு கிடைக்கப்பெறுபவை. இன்று இத்தனையும் சுறுங்கி இரண்டொன்றாகிப் போயின என்பது எவ்வளவு சங்கடம்.

மழையை மட்டுமே நம்பி, விதைப்பை நடத்தி வெற்றிக்கொண்ட தமிழ்ச் சமூகம் பல சாதனைகளையும் கண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன் வந்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் அன்று ஆங்கிலேய அரசுக்கு சமர்பித்த அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.அதில் தமிழர்களின் பாசன முறைப்பற்றி வியந்து எழுதியுள்ளான். சில இடங்களில் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராகவே நீரை வழிப்படுத்தி வேளாண்மையில் வெற்றிக்கண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்றிருக்கிறான் அகஸ்டஸ். பொதுவாழ்க்கையில் இந்தச் சமூகம் எவ்வளவு நேர்பட வாழ்ந்த்து என்பதற்கு ஒரு சிறு சான்று இதோ:

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தை ஆண்ட பாண்டிய மன்னனின் தளபதியான (சிற்றரசன்) இருந்தவன் காளிங்கராயன். இவன் வாழ்ந்தப் பகுதிக்கு ஆற்றுநீரைக் கொண்டுவரத் திட்டமிட்டான். பவானி ஆற்றில் கிளைப் பிரித்தான்.தன் தாய்,பால் விற்று நெய் விற்று சேர்த்திருந்த பணத்தை எல்லாம் செலவழித்து அணைக்கட்ட ராப்பகலாக உழைத்தான்.இறுதியில் மிகப்பெரிய காளிங்கராயன் கால்வாய் உருவாயிற்று. தாழ்வாயில் உள்ள முடியை மழிக்க நேரமில்லாமல் உழைத்தவன் கால்வாய்த் திறக்கப்போகும் நேரத்தில் அயர்ந்து தூங்கிவிட்டான். எல்லா பணிகளையும் முடித்து அவன் எழுந்த போது,காளிங்கராயன் ஊரார் பணத்தை முழுக்கச் செலவழித்து தன் நிலத்திற்கு தண்ணிர் கொண்டு போகிறார் என்று அவன் காதிற்கு ஒரு அவதூறு செய்தி வருகிறதுஇதைக் கேட்டு காளிங்கன் சொன்னான்: நானோ,எனது சுற்றமோ இந்தக் கால்வாயில் குடிப்பதற்கு ஒருமுறை தண்ணிர் எடுத்தால்கூட ‘காசியில் காராம்பசுவைக் கொன்ற பாவம் செய்தவர்களுக்கு ஒப்பாவோம்’.அதற்குரிய தண்டனையை அனுபவிப்போம் என்று அறிவிக்கிறான்.இச்செய்தி கேட்ட அவனது உறவினர்கள் எல்லாம் காளிங்கன் கால்வாயை ஒட்டி உள்ள தங்களின் நிலத்தை விற்றுவிட்டு வேறு பக்கம் நிலம் வாங்கிக்கொண்டுப் போகிறார்கள். செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் ஆற்று நீராதாரம் அற்றக் கிடந்த நிலங்களைக் கூட வளப்படுத்தி வாழ்ந்தச் சமூகம் இன்று ரூபாய்க்கு ஒருகிலோ அரியை ரேஷனில் எதிர்பார்த்து காத்து நிற்கிற கொடுமையை எங்கே போய் சொல்வது? 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் தொடக்கக் கால ஆங்கிலேய ஆவணங்கள் அலகாபாத் முதல் கோவை வரையில் பரவலாக பல இடங்களில் உயர் விளைச்சல் இருந்துள்ளதை பதிவு செய்திருக்கின்றன. 1910 கிராமங்களில் சுமார் 1500 கிராமங்களின் வருவாய் பற்றிய தரவுகள் நமக்கு இன்று கிடைத்துள்ளன.1550 கிராமங்களில் வாழ்ந்த 45000 குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஆண்டிற்குச் சராசரியாக 5டன் உணவு தானியம் பெற்றிருந்தது எனவும்,65 கிராமங்கள் ஒரு ஆண்டிற்குச் சராசரியாக 5000கலத்திற்கு அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்து எனவும் அறிக்கைகள் வந்துள்ளன. சிங்கப்பெருமாள் கோயிலையும்,ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் சாலையில் வடக்குப்பட்டு என்ற கிராமம் உள்ளது.18ம் நூற்றாண்டு ஆவணங்களின் படி வடக்குப்பட்டு கிராமம் வேளாண்மையில் சிறப்பான உயர்விளைச்சல் கண்டிருக்கிறது. பார்னார்டு என்பவர் 1774அ ஆண்டு நவம்பர் மாதம் எழுதிய தமது கடிதத்தில் 1772 முதல், தான் இது போன்ற கிராமக்கணக்கு ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கி உள்ளதாக குறிப்பிடுகிறார்.

காவிரி பகுதியில் காணப்படும் கி.பி.900-1200வரையுள்ள காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஒரு ஏக்கருக்கு 6000முதல் 7200 கிலோகிராம் நெல் விளைந்ததைப் பதிவு செய்துள்ளன. 1100 ம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் ஏக்கருக்கு 5800கிலோ விளைந்த்தாக கல்வெட்டு ஒன்று கூறுகிறது. 1325ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் ஏக்கருக்கு 8000கிலோ விளைந்ததாக கல்வெட்டாதாரம் கிடைத்துள்ளது.அதேபோல 1807ல் கோவை மாவட்டத்தில் ஏக்கருக்கு 5200கிலோ விளைந்ததாக ஐரோப்பிய ஆவணம் சொல்கிறது. இதற்கெல்லாம் இன்று ஒப்பிட்டு பார்க்க ஏதாவது ஆதாரம் உள்ளதா என்பவர்கள், எக்னா நாராயண் அய்யர் என்ற வேளாண் நிபுணர் தமிழகத்தில் பல இடங்களிலும் கிடைத்த விளைச்சலை அளந்துபார்த்து ஆவணப்படுத்தியுள்ளதை தேடிச் சென்று விடை அறிந்துகொள்ளலாம் என்கிறது இந்த நம்மாழ்வாரின் புத்தகம்.இதோடு சேர்ந்து மண் நலம் பயிர் நலம் மக்கள்நலம் பறிபோன வரலாற்றை மறுபடி நமக்கு நினைவூட்டவும் முயலுகிறது இந்நூல்.கூடவே இவ்வளவு இயற்கை சுழற்சியோடு செம்மையுற்ற நம் வேளாண்மை, பசுமைப்புரட்சி,மன்சாண்டோ விதைகளின் அறிமுகம் போன்றவற்றால் நசிந்துபோய் வருகிறது என எச்சரிக்கையையும் மணியடிக்கிறது.

இன்றைக்கு உலகில் உள்ள விதை இனங்களில் 90 சதவீதம் மன்சாண்டோ நிறுவனத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் மரபீனி மாற்று உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் போது,அதனை மரபீனி மாற்றம் செய்யப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவித்து விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஆனால் இந்தியாவில் அதற்கான எந்த முஸ்தீபுகளும் தென்படவில்லை. இந்தியாவில் மட்டும் மரபீனி மாற்று வேளாண்மையில் 236 ரகப்பயிர்கள் மீது ஆய்வுகள் நடைபெறுகின்றன.அவற்றில் உணவுப் பயிர் வகைகள் மட்டும் 169. இதில் புதியதாக முளைத்திருக்கும் அபாயம் என்னவென்றால் உணவுப் பொருட்களை தொடர்ந்து மூலிகைகளின் மீது,மரங்களின் மீது ஆய்வுகள் நடைபெற ஆரம்பித்திருப்பதுதான். நம் நாட்டில் 1500 தாவரங்கள் மருத்தவத் தாவரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இவற்றில் 500தாவரங்கள் நேரடி மருந்து தயாரிப்பில் பயன்படுத்தபடுபவை. இவையும் நஞ்சாகும் ஆபத்து தற்போதைக்கு நம்மை சூழ அரம்பித்திருக்கிறது என அறிவுறுத்துகிறார் நம்மாழ்வார்.

ஏற்கெனவே இந்தியாவில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பல நாசங்களை நம்மண்ணில் விதைத்த ராக்பெல்லர் பவுண்டேசன்தான் இன்று மரபீனிப் புரட்சியை நம்மீது திணித்துவருகிறது. இவ்வளவு கொடுமைகளைவும் தாங்கிக் கொண்டு நாம் நாட்டு வேளான் விஞ்ஞானிகள் என்னதான் செய்கிறார்கள்? அவர்கள் மெக்கலேவின் வாரிசுகளாய் இன்றும் அருமையாய் கடமையாற்றி வருகிறார்கள் அவ்வளவுதான். இதில் இருந்து நமக்கு என்ன புரிகிறதுதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-உரிமையாளர் மான்சாண்டோஎன நம்மாழ்வார் ஏற்கெனவே குறிப்பிட்டு எழுதியதில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது.

(வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்,ஆசிரியர்:கோ.நம்மாழ்வார்,வெளியீடு:நமது நெல்லைக் காப்போம் இயக்கம்,ஹெச்-3,ஜவஹர் நகர், கவ்தியார், திருவனந்தபுரம்-695003.கேரளா.பேச:0471-2727150 மற்றும் வானகம்,60-3 எல்.பி.சாலை,திருவான்மியூர்,சென்னை -600041,பெச:09442531699)

தகவல்: ஆகஸ்ட் மாத சிற்றிலை கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது

1 comment:

  1. புத்தகம் வாங்க வேண்டும். இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கான புரிதலை உருவாக்க வேண்டிய சூழல் இன்று உள்ளது. அனைவரிடமும் சேர்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    ReplyDelete